தென் சென்னை செய்திகள்
டீசல் விலை உயர்வு: தனியார் பேருந்து கட்டணம் 50 ரூபாய் உயர்ந்தது
டீசல் விலை உயர்வு காரணமாக தனியார் பேருந்து கட்டணம் இன்று முதல் உயர்ந்துள்ளது. குளிர் சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு 50 ரூபாயும், அல்ட்ரா டீலக்ஸ் பேருந்துகளுக்கு 20 ரூபாயும் உயர்த்தப்பட்டுள்ளது. இது குறித்து ஆம்னி பேருந்து ஆபரேட்டர்கள் சங்க தலைவர் அப்சல் கூறியதாவது:- டீசல் விலை அடிக்கடி உயர்ந்து வருவதால் இத்தொழில் மிகவும் பாதிக்கப்படுகிறது. அதிக வரி சுமையால் இத்தொழிலில் இருந்து பலர் வெளியேறிவிட்டனர். ஒரு சில ஆபரேட்டர்கள் மட்டும் தான் கவுரவத்திற்காக பேருந்து தொழிலில் ஈடுபட்டு வருகிறோம். டீசல் விலை தற்போது ரூ.3.63 பைசா உயர்த்தப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்து கட்டண உயர்வும் தவிர்க்க முடியாததாகி உள்ளது. குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு 50 ரூபாயும், குளிர்சாதன வசதி அல்லாத மற்ற பேருந்துகளுக்கு 20 ரூபாயும் உயர்த்தப்படுகிறது. இன்று மாலையில் இருந்து இந்த புதிய கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. இவ்வாறு அப்சல் கூறினார்.
